அரப்பலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்விப்பணி தொடக்க நிகழ்ச்சி
களுத்துறை மாவட்டம் தெபுவனைப் பிரதேசம்,அரப்பலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் 3ஆம் ஆண்டிலிருந்து 5ஆம் ஆண்டுவரையான மாணவர்களைக் கல்வியில் மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு சனிக்கிழமையும் கற்பித்தலும் கற்பித்தலைத் தொடர்ந்து தேர்வும் என்று மாணவர் தேர்வுகளில் புலமை பெறச்செய்யும் நோக்கில் இச்செயற்றிட்டம் 05 - 10 - 2024ஆம் நாள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் தொடங்கிவைக்கப்பட்டது. இச்செயற்றிட்டமானது, நீண்டகாலத் தேர்வுப்பயிற்சிகளினூடாகத் தேர்வுகளில் பயம் கொள்ளாது; தேர்வுகளை எதிர்கொள்ளும் உளப்பாங்குடைய மாணவர் குமுகாயத்தை இளம்பருவத்திலேயே கட்டமைக்கும் நன்னோக்கும், இளம்பருவத்திலேயே மாணவரின் கல்வித்திறனிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு, முறைப்படியான பயிற்சிகளைச் சிறப்புக்கவனம் எடுத்து வழங்குவதனூடாக, மாணவரின் சராசரித் தேர்வுப் பெறுபேறுகளை உயர்த்தும் உத்தியையும் கருத்திற் கொண்டு, இச்செயற்றிடம் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் கல்விப்பிரிவால் மிகச்சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டு, ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு குமுகாயம் முன்னேறவேண்டும் என்றால், வெறுமனே சில மாணவரின் பெறுபேறுகளை உயர்த்துவது பலிக்காது என்பதனை நன்குணர்ந்து, எல்லாவகையான கல்வித்தரத்திலும் உள்ள மாணவர் அனைவரும் சிலபடிகளேனும் முன்னேற்றம் அடையவேண்டும் என்றும், அதுவே ஒரு குமுகமாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்றும் திடமாய் உணர்ந்து, இச்செயற்றிட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தரம் 2, தரம் 3, தரம் 4, தரம் 5 மாணவருக்குக் கற்பித்து, அதன்பிறகு அம்மாணவருக்குத் தேர்வுகளும் நடத்தி, அத்தேர்வுத்தாள்களை கிழமை நாள்களில் திருத்தி, மீண்டும் அடுத்த சனிக்கிழமை மாணவரின் பெறுபேறுகளையும் மாணவர் மேலதிகக் கவனம் எடுத்துச் சொல்லிக்கொடுக்கவேண்டிய பாடப்பரப்பையும் இனங்கண்டு, சிறப்புக்கவனம் எடுத்துக் கற்பிக்கும் பொறிமுறையே இக்கல்வித்திட்டச் செயன்முறையாகும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.00மணி முதல் மதியம் 12.00மணிவரை நடைபெறும் இக்கல்விச் செயற்றிட்டத்தில், ஆசிரியர்களுக்குரிய ஊக்கத்தொகை, தேர்வுத்தாள்களுக்குரிய செலவு முதலியவற்றை இலங்கைச் சைவநெறிக் கழகமே முழுமையாகப் பொறுப்பெடுத்து, இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் களுத்துறை மாவட்ட இணைப்பாளர் சைவத்திருமதி. கோகிலா தம்பிராஜா அவர்களின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்படுமாறு தொடங்கப்பட்டுள்ளது.பாடசாலை அதிபர் ஆசிரியர் பெற்றோர் அபிவிருத்தி சங்க உறுப்பினர் பழைய மாணவர் சங்க உறுப்பினர் என்று அனைவருடைய பெரும் ஒத்துழைப்போடு, இலங்கைச் சைவநெறிக் கழகம் இத்திருப்பணியை 05 - 10 - 2024ஆம் நாள் சிவபூசையோடு ஆரம்பிக்கத் திருவருள் கூடியது.






































Comments
Post a Comment