சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்
தமிழ்நாடு புனிதர் பேரவைச் சைவக்கோமகனார் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் எழுதப்பட்ட சுத்தசைவம் நூலின் உயர்வை உலகுக்கு உணர்த்தவேண்டும் என்று திருவருளில் அழுந்தி, சுத்தசைவம் நூலினை யானையில் ஏற்றிப் பெருவிழாவாகக் கொண்டாடி நூல் வெளியீட்டினைக் கொழும்பில் நடத்துவோம் என்று விண்ணப்பித்ததும், சைவம் போற்றுதும் விழாவுக்குத் தாம் கலந்துகொள்வோம் என்றும், சுத்தசைவம் நூல் அரங்கேற்ற விழாவை இலங்கைச் சைவநெறிக் கழகமே முன்னின்று நடத்தும்படியும் நூலாசிரியர் சைவக்கோமான் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனார் அனுமதியளித்தருளினார். நூலாசிரியர் பெருமகனாரின் அனுமதிப்பேறு வாய்க்கப்பெற்றதனால், சுத்தசைவம் நூலின் உயர்வை யானையில் நூலினை ஏற்றி ஊர்வலஞ் செய்வதனூடாகச் சைவப்பெருமக்கள் மனதில் உணர்த்திவிடலாம் என்று சிந்தித்து, இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் வழிகாட்டியாக விளங்கிய தவஞானி சைவப்பெரியார் ந.சிவபாலகணேசன் பெருமகனாரிடம் விண்ணப்பித்தபோது, நூலாசிரியரையும் யானையில் ஏற்றுதல் வேண்டும் என்று அதிட்டித்தார். எனினும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தாரின் இவ்விண்ணப்பத்தை நூலாசிரியர் பெருமகனார் ஏற்கமாட்டார் என்பதனை ஒருவாறு உணர்த்தியதும், தாமும் தமது தலையில் சுத்தசைவம் நூலினைத் தாங்கி வீதிவலம் வரவேண்டும் என்றும், அதற்கு இலங்கைச் சைவநெறிக் கழகம் அனுமதியளிக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். இலங்கைச் சைவநெறிக் கழகம் அவருடைய ஏவலுக்கு இயங்கும் அருட்கழகம் என்று சைவப்பெரியார் ந.சிவபாலகணேசன் பெருமகனாரிடம் அடக்கத்துடன் விண்ணப்பித்து, அப்பெரியார் வேண்டிக்கொண்டவாறு ஊர்வலத்தில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
11ம் நூற்றாண்டில் பராக்கிரமபாகு மன்னன் பூஜாவளி என்னும் நூலினை யானைமேல் ஏற்றி நகர்வலம் வந்து அரங்கேற்றினான். அதன்பிறகு பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை பெருமகனார் எழுதிய கந்தபுராணம் தட்சகாண்டத்திற்கு எழுதிய உரையினை நூலாக்கி, யானைமேல் ஏற்றி பேராதனையில் நகர்வலமாய்க் கொண்டுசென்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலை மண்டபத்தில் 1967ஆம் ஆண்டு சனவரி மாதம் 25ம் நாள் அரங்கேற்றினர். திருமுறைகளினை யானைமேல் ஏற்றிப் பவனியாக சில சைவ அமைப்புகள் சிலசமயம் செய்துள்ளனர். யானைமேல் ஏற்றி புதிய நூல் ஒன்றினை அரங்கேற்றியது மிகவும் அரிதான நிகழ்வேயாகும். இந்த வரலாற்றில், தமிழ்நாட்டின் புனிதர் பேரவை அமைப்பினூடாக வெளிவந்த, சைவக்கோமான் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனார் எழுதிய சுத்தசைவம் நூலினை யானைமேல் ஏற்றி பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் கோயிலில் இருந்து வலமாக காலிவீதியினூடாக நகர்பவனி வந்து சரசுவதி மண்டபத்தில் ''சுத்தசைவம்'' நூல் அறிமுகவிழா இனிதே நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் சிவாகமபீடத்தின் சிவாச்சாரியப்பெருமகனார், சிவஸ்ரீ. கிருஷ்ண ஜனேந்திர சிவாச்சாரியார் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் விண்ணப்பத்தை ஏற்று, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இவ்விழாவின்பொருட்டு வருகைதந்து, விழாவிற்குரிய சிவாசாரிய குருவருட் தலைமையை ஏற்றருளினார். சுத்தசைவம் நூல், கொழும்பு சம்மாங்கோடு அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயில் மூலட்டானத்தில் பூசைசெய்யப்பட்டு, திருக்கோயில் உள்வீதி வலம்வந்து, யானையில் ஏற்றப்பட்டது. இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் பொருளாளர் சைவத்திரு.கோபால் இளையராஜா அவர்கள் யானையில் ஏறிச் சுத்தசைவம் நூலினைத் தாங்கி நின்றார்.சைவப்பெரியார் சிவபாலகணேசன் பெருமகனார் ஊர்வலத்தில் தமது தலையிலும் நூல்களினைச் சுமக்கவேண்டும் என்று விண்ணப்பித்து வாங்கித், தம்தலையில் சுமந்துவரலாயினார். மூட்டுவலி,குதிக்கால்வலி என்று முதுமை நோய்களால் வாடி நின்றபோதும், ஊர்வலத்தில் காலணி எதுவும் அணியாது நடக்கவேண்டும் என்று பிடிவாதமாய் நின்று சாதித்தும் காட்டினார். குருதி உறையாமல் இருப்பதற்கு மருத்தெடுத்துவரும் அப்பெருமகனார், தம்தலையில் நூல்களின் பாரத்தினால் ஏற்பட்ட கண்டல்காயத்தினைப் பொருட்படுத்தாது, ஊர்வலம் முடிந்து மண்டபத்தில் நூல்கள் வைக்கப்படும்வரை தம்தலையில் காவிக்கொண்டே வந்தார்.
முழங்கால் மூட்டெழும்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருமதி அபிராமி கயிலாசப்பிள்ளை அம்மையார், ஊர்வலத்தில் நடந்துவருதல் தம்கடன் என்று நூலின் சிறப்பினை அறிந்து ஊர்வலம் முழுதும் நடந்தே வந்தார். இந்நூலின் சிறப்பினை உணர்ந்துகொண்ட சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார், யானையினை ஏற்பாடுசெய்வதற்குரிய பணிகளினைத் தம்சிரம்மேற் கொண்டு, இறாகமப் பிரதேசத்தில் இருந்து பெரிய யானையினை கொழும்புக்கு வரவைத்தார். நூல் ஏற்றப்படும் யானை பெரிய யானையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்த இப்பெருமகனாரின் கனவு மெய்ப்படத் திருவருளும் துணைபுரியலாயிற்று. விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனார், சைவப்பணியென்றால் இளைஞராக உருவெடுக்கும் சிறப்புடையவர். ஓடித்திரிந்து சைவப்பணிகளினை நிறைவேற்றி மகிழும் புகழுடையவர். முதுமையும் முதுமை நோய்களும் அவருடைய சைவப்பணிகளின் ஆர்வத்திற்கு முன்னால் ஓடியொழிந்துவிடும். சுத்தசைவம் நூலின் சிறப்பினை அறிந்துகொண்ட இப்பெருமகனார், இந்நூலினைக் கேள்விப்பட்ட காலந்தொட்டு நூல் அறிமுக விழாவினைச் செவ்வனே செய்திட வேண்டும் என்ற சிந்தையுடையவராயினார். ஊர்வலம் சிறப்பாக அரங்கேறுவதே நூலுக்குச் செய்யும் தகுந்த மரியாதை என்பதினை மனதில் கொண்டு, விழாவின் ஒவ்வொரு விசயத்தினையும் கேட்டறிந்து வழிப்படுத்துவதில் இப்பெருமகனாரின் பங்கு போற்றுதலுக்குரியது. சைவப்பெரியோர் பலரும் தம் வயது, பொன்னான நேரம் என்று எதுபற்றியும் சிந்தியாது, இந்நூலினைக் கொண்டாடுவதே சிவபெருமானுக்குச் செய்யும் சிறந்த பூசை என்று உணர்ந்து ஊர்வலத்தில் சைவக்கோலத்துடன் கலந்துகொண்டு, திருமுறைகள் ஓதி, ஊர்வலத்தினை சிவப்பொலிவுபெறச் செய்தருளினர். யானை ஊர்வலம் திருமுறைப் பாராயணத்தோடு நகர்வலம் இனிதே நடைபெற்றது. மாணவர் முதலியோரினைச் சிவத்திரு.சொர்ணலிங்கம் ஈசானதேசிகர் நெறிப்படுத்திச் சிவபெருமானின் திருச்செவிகள் குளிருமாறு திருமுறைப் பாராயணத்தை நடத்தியருளினார்.
நாவலர்பெருமானினை பல்லக்கில் ஏற்றிக்கொண்டாடிய மண்ணுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் கைமாறு சிறிதேனும் செய்யும் அருள்வளத்தினை பெறுவதற்கும் ஏதுவாயிற்று. உயர்நீதிமன்ற நீதியரசர் உயர்திரு.சி.துரைராஜா பெருமகனார் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்கார். கொழும்புச் சைவப்பெரும் அமைப்புகளின் சிறப்புடை நிர்வாக உறுப்பினர் பலரும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.சங்கீதபூஷணம் ஹம்சானந்தி தர்மபாலன் அம்மையாரினது திருமுறை பண்ணிசை அரங்கும், சிவநெறி போற்றும் கலை நிகழ்ச்சிகளும் இவ்விழாவின்போது அரங்கேறின. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயத்துறைத் தலைவர் திருமதி.செ.உதயகௌரி அவர்கள் ''சைவப்புலவர்'' பரீட்சையில் சித்திபெற்று சைவ உலகம் போற்றும் சிறப்பினைப் பெற்றமையினைப் பாராட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தின் விண்ணப்பதினை ஏற்று, திருமதி.அபிராமி கயிலாசப்பிள்ளை அம்மையாரினாலும் சங்கீதபூஷணம் ஹம்சானந்தி தர்மபாலன் அம்மையாரினாலும் சிறப்பிக்கப்பட்டார்.
சுத்தசைவம் நூல் அறிமுகவிழாவைப் பாராட்டி இந்து குருமார் அமைப்பினால் அச்சுவேலிக்குமாரசுவாமிக் குருக்கள் பெருமகனாரின் பூட்டனாரும் இந்து குருமார் அமைப்பின் தலைவருமான சிவத்திரு.கு.வை.க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களால் வாழ்த்துச் செய்தி வழங்கப்பட்டது ஈழத்துச் சிவாசாரிய மரபின் சால்பைத் தமிழ்நாட்டிலும் நிலைநிறுத்தும் சிவத்தொண்டாயிற்று.























.jpeg)

.jpeg)

Comments
Post a Comment