நெடுந்தீவுத் திருமண்ணில் சைவசமயத்தீக்கைச் சிவப்பணி 2024
நெடுந்தீவில் பீடுபெறும் சைவப்பெருஞ்சமயம்
நெடுந்தீவு இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று.
ஒல்லாந்தர் இத்தீவை DELFT என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. தலைத்
தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத் தீவு, தயிர்த்தீவு முதலான பெயர்களால் நெடுந்தீவு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது. யாழ் குடாநாட்டில் இருந்து
நெடுந்தொலைவில் இருப்பதனால் இத்தீவு நெடுந்தீவு என்று பெயர் பெற்றது என்பர்.
போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி
இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே. யாழ்ப்பாணத்திலிருந்து
இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும். ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர்
மட்டுமே. நெடுந்தீவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டர் அகலத்தையும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த இணைகர
வடிவில் 30 கிமீ சுற்றளவையும், 48 சதுர
கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.
சைவத்திரு.நாகேந்திரர் அமிர்தரட்னராஜா ''நெடுந்தீவு மக்களும் வரலாறும்'' நூலுக்கு வழங்கிய சிறப்புரையில், யாழ்ப்பாண வைபவ மாலையே நெடுந்தீவில் இருமரபுந்தூய தனிநாயக முதலியவர்கள் குடியேறிய செய்தி ஆவணப்படுத்தப்பட்டு, நெடுந்தீவு பற்றிய முதலாவது குறிப்புக் கிடைப்பதாகவும், யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாண வைபவ கௌமுகி நூல்களும் நெடுந்தீவு குறித்த் செய்திகளைக் குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள சித்தமருத்துவ மூலிகை வளத்தினால், யாழ்ப்பாண மன்னனாகிய செகராசசேகரன் இத்தீவினை மருத்துவமாலைவனம் என்று போற்றியுள்ளான். இம்மண்ணில் சைவசமயம் சீரும் சிறப்புமுடன் விளங்கிய பெருமை பல்வேறு சான்றுகளால் துணியக்கூடியதாகவுள்ளது. சிவபெருமானுக்கு அபிடேகப்பிரியன் என்றொரு புகழ்ப்பெயர் உண்டு. அதுபோல், இத்தீவுக்கும் அபிடேகத்தீவு என்று பெயர் உண்டு. பால்த்தீவு,தயிர்த்தீவு முதலிய பெயர்களும் இங்கு நடைபெற்ற சிவாலய அபிடேகச்சிறப்பினால் ஏற்பட்டிருக்ககூடும் என்பது சான்றோர் சிந்தனை முடிவு. சோழர்காலத்து சிவாலயம் ஒன்றின் தொல்பொருள் தடையங்கள் இனங்காணப்பட்டுள்ளதிலிருந்து, இவ்வாலயத்தில் நிகழ்ந்த சிறப்பான அபிடேக வழிபாடுகளினால் அபிடேகத்தீவு,பால்தீவு,தயிர்த்தீவு என்னும் பெயர்கள் இத்தீவுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்பதனைத் தெளியலாம். பசுமாடுகள் நிறைந்த பூமியாகவும் பால்பண்ணைத்தொழில் பெருமளவில் நடைபெற்ற இடமாகவும் இத்தீவு விளங்கியதனால், பசுந்தீவென்று இத்தீவு அழைக்கப்பட்டுள்ளதான தரவினாலும், இத்தீவில் அபிடேகப்பிரியரான சிவபெருமானுக்கு சிறப்பான சிவாலயம் விளங்கி யிருத்தல் துணியக்கூடியவொன்றாகும்.
இணையத்தில் உள்ள அரச உத்தியோகபூர்வத் தகவல்களின் அடிப்படையில் நெடுந்தீவில் 2015ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டிற்கு சேர்ந்த மாணவர் எண்ணிக்கை மொத்தம் 54 ஆகும். தற்போது, நெடுந்தீவில் ஏறத்தாழ 4500க்கும் குறைவானவர்களே இருப்பதாகக் குறிப்புகள் நிலவுகின்றது. இத்தீவில் உள்ள மக்களின் நலன்பொருட்டு உத்தியோகபூர்வ பெற்றோலிய நிறுவனங்கள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை. எனவே, பெற்றோல் டீசல் முதலியன யாழ்ப்பாணத்தில் இருந்து தனியாரால் சிறியளவில் கொள்வனவு செய்யப்பட்டு, பாதுகாப்பற்ற முறையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. வாகனம் ஒன்று பழுதானால் பழுதுக்குரிய பகுதியை இனங்கண்டு, அதனை மட்டுமே கழட்டியெடுத்து, யாழ்ப்பாண நகரத்திற்குப் பயணித்துத் திருத்துதல் வேண்டும். ஏனெனில், இங்கு வாகனங்களைத் திருத்தக்கூடிய எந்தவொரு கடைகளும் அதற்குரிய வசதிகளோடு இல்லை. மகிழூர்ந்து முதலிய வாகனத்தைக் கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டுசென்று திருத்துவதென்றால், கப்பற் செலவே ஒரு இலட்சம் ரூபாய் தேவைப்படும் என்பதனால், இங்குள்ளோர் சொகுசு வாகன வசதி எதுவும் இல்லாது, மோட்டார் சைக்கிள் (ஊந்துருளி) வாகனத்தையே பெரிதும் பாவனையில் கொண்டுள்ளனர். திரைப்படங்களைப் பார்ப்பதற்குரிய திரையரங்குகள் இல்லை. மின்சாரவசதியும் இயந்திரங்களினூடாக மின்சாரசபையால் வழங்கப்படும் மின்சாரமேயாகும். இயந்திரங்கள் திருத்தற்பணியென்று நாளொன்றுக்குப் பலதடவை மின்சாரம் தடைப்படுவது இங்கு இயல்பானது. கணிதம் விஞ்ஞானம் முதலிய பாடங்களில் உயர்தரக் கல்வி மேற்கொள்ள விரும்பினால், அதனைத் தனியார் வகுப்புகளுக்குச் சென்று பெற்றுக்கொள்வற்கு ஏறத்தாழ 2 மணித்தியாலம் பயணஞ் செய்து, யாழ்ப்பாண நகரத்திற்கு வந்து, 2 மணித்தியாலப் பயணத்தால் மீண்டும் திரும்பவேண்டிய நிலையே உண்டு. கப்பல் பயணஞ் செலவுகளும் உள்ளடக்கப்படுவதினால், விலை நிர்ணயிக்கப்படாத பொருள்கள் யாவும் இலங்கையின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் சற்றுக் கூடவாகவே விற்கப்படுகின்றன. விலை நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை விற்கும்போது, இலங்கையின் ஏனைய பகுதி கடைக்காரர்களிலும் இங்குள்ளோர் இலாபத்தைச் சொற்பமாகவே பெற்றுக்கொள்கின்றனர். அடிப்படை மருத்துவவசதி மட்டுமே உண்டு. மருத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்பட்டால், யாழ்ப்பாணத்திற்கு நோயாளர் அனுப்பிவைக்கப்படவேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு சிரமங்கள் பல நிறைந்தும் கடற்றொழில் முதலியவற்றைக் கைவிட்டால் வேறு வருமானம் இல்லையென்பதால் பலரும், ஆதனங்களைவிட்டு நீங்க மனம் இல்லாமல் பலருமாகவே நெடுந்தீவு விளங்குகின்றது. வேலைவாய்ப்புக்கள் மிகச்சொற்பமே என்பதனால், நெடுந்தீவில் இருந்து வேலைவாய்ப்பைத் தேடி ஏனைய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தவாறே பலரும் உள்ளனர். நெடுந்தீவின் சனத்தொகை குறைந்தவாறே இருப்பது அரசாங்கத் தரவுகளில் இனங்காணப்பட்டுள்ளது.
தற்போது விளங்கும் 4500க்கும் குறைவான சொற்பமான சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் கத்தோலிக்கக் கிருத்தவர்களாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மெதடித்து கிருத்தவர்களும் இருப்பதோடு, சைவசமயத்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட வீதத்தில் உள்ளனர். எனினும், நெடுந்தீவுக்குரிய அடிப்படைவசதிகளைப் பெற்றுக்கொள்வதில் போர்க்காலத்தில் கத்தோலிக்க மதகுருமாரே அரசுக்கு அழுத்தம் கொடுக்ககூடிய செல்வாக்கில் இருந்தமையினாலும், கத்தோலிக்க மதகுருமாரின் செல்வாக்கு அரச துறைகளில் ஆழமாக நிலைபெற்றுள்ளது. மதரீதியான புரிந்துணர்வும் ஒற்றுமையில் தமிழ்த்தேசிய உணர்வில் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளபோதும், கத்தோலிக்கமல்லாத ஏனைய கிருத்தவப்பிரிவுகளின் போதகர் செய்யும் கட்டற்ற மதப்பிரச்சாரங்களும் கிருத்தவ மேலாதிக்கம் நிலவும் அரச நிர்வாகத்தில் சைவசமய விழுமியங்களை மேம்படுத்துவதில் திரைமறைவில் எழுப்பப்படும் தடைகளும் , தற்காலத்தில் விளங்கும் சைவசமய குருமார் பலருக்கும் போதிய சமயத்தெளிவு இன்மையினாலும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு சைவசமயக்குருமார் குரல்கொடுக்காது ஒதுங்கி நிற்கும் இயல்பினாலும், சைவாலயங்களில் சமயபோதனைகளைச் சைவசமயகுருமார் கொடுப்பதில் அக்கறைகாட்டாமையினாலும், குடும்பச்சிக்கல்கள் முதலியவற்றில் கிருத்தவமதகுருமார் தலையிட்டுத் தீர்வுகள் ஏற்படுத்திக்கொடுத்தல் முதலிய சமூகச்செயற்பாடுகளினாலும், பெரும்பாலானவர் கடற்றொழிலில் ஈடுபடுவதால் அசைவ உணவுக்கே பொருளாதாரரீதியில் ஈடுகொடுக்கக்கூடிய சூழலில் அக்குடும்பங்கள் இருப்பதனாலும், அவ்வாறான அசைவ உணவுப் பாரம்பரியம் சைவசமயவழிபாடுகளுக்குத் தடையாகும் என்னும் கோட்பாடுகள் சைவசமயத்தாரிடம் ஆழவேரூன்றியிருப்பதனாலும், இன்னோரன்ன காரணிகளினாலும் மதமாற்றங்கள் ஆங்காங்கே நிலவிவருவதும் நிதர்சனமாகும்.
எனவே,இப்பிரதேசத்தில் சைவசமய தீக்கை கொடுத்து சைவசமய அறநெறிப் பாடசாலைகளைப் பலப்படுத்த வேண்டும் என்னும் சிந்தனையோடும், அங்குள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களைச் சைவசமயப் போதகர்களாக உயர்வுபெறும் வகையில் வழிகாட்டல்களை தொடர்ச்சியாக வழங்கவேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தோடும், இலங்கை சைவநெறிக் கழகம் நெடுந்தீவில் சைவசமயதீக்கை வழங்குவதற்கு திடசங்கற்பம் பூண்டது. இதற்குரிய விண்ணப்பத்தை சைவத்திரு.கு.இலட்சுமணன் அவர்களும் சைவத்திரு.அ.கண்ணப்பன் அவர்களும் ஏற்படுத்தியிருந்தனர். இதன்போது,
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினூடாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டபோது ஏழு சைவசமய அறநெறிப்
பாடசாலைகள் பதிவில் இருப்பது அறியப்பட்டது. எனினும், நெடுந்தீவு அரிகாராம்பாள் அறநெறி பாடசாலை, நெடுந்தீவு கரமத்தைக்கந்தன் அறநெறிப்பாடசாலை, ஆலமாவன அறநெறிப்பாடசாலை
என்னும் மூன்று சைவசமய அறநெறிப் பாடசாலைகளே இயங்கிவருவது அறியக்கூடியதாயிற்று. இம்மூன்று
அறநெறிப் பாடசாலைகளையும் ஒருங்கிணைத்து சைவசமய தீக்கையினை மாணவர்களுக்கும் சைவசமய அறநெறி ஆசிரியர்களுக்கும் வழங்கி, நாவலரின்
நித்திய கரும விதிப்படியான சைவசமய
அனுட்டானத்தை ஞாயிறுதோறும் சைவசமய அறநெறி வகுப்பில் முன்னெடுக்கவும், அன்புமார்க்கச் சிவபூசையை ஒவ்வொரு மாணவரும் ஆன்மார்த்தமாக நிகழ்த்தும் வகையிற் ப்யிற்றுவிக்கவும் முடிவுசெய்யப்பட்டு, 08ஆம் திகதி இம்மாதம்
சமயதீக்கையையும் சைவ அனுட்டானப்பயிற்சியையும் அன்புமார்க்க ஆன்மார்த்த
சிவவழிபாட்டுப் பயிற்சியையும் வழங்குவதென்றும், 7ஆம் திகதி மாணவரிடமும்
பெற்றோரிடமும் சமயதீக்கையைப் பெறுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் சைவப்போதனையை மேற்கொள்வதென்றும் திருவருளைச் சிந்தித்து முடிவு செய்யப்பட்டது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ய.அநிருத்தனன் அவர்கள், நாவலர் பெருமான் எழுதியருளிய நித்திய கரும விதி நூல்களையும்
இன்னும் பல நூல்களையும் மாணவர்
அனைவருக்கும் வழங்கும் வகையில் திணைக்களத்தின் அனுசரணையாகத் தந்துதவியதோடு, கலாசார உத்தியோகத்தர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய பணிப்புரைகளையும் வழங்கி, இச்சீரிய சிவப்பணிக்கு பேராதரவு வழங்கினார். அத்தோடு, கொக்குவில் தென்னாடு செந்தமிழாக மடத்தின் நிறுவுனர் சைவத்திரு.தென்னவன் பார்த்தீபன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமது மடத்தில் தங்குவதற்குரிய
ஏற்பாடுகளைச் செய்து உதவினார். சமயதீக்கைக்குரு சிவாசாரியராகச் சிவத்திரு.கிருஷ்ண ஜனேந்திரக் குருக்களே விளங்கவேண்டும் என்று இலங்கை சைவநெறிக் கழகத்தால் வைக்கப்பட்ட விண்ணப்பத்தை, முழுமனதோடு ஏற்றுக்கொண்டுப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் உதவி ஐயர் சைவத்திரு.குரபரன் ஐயரோடு வந்து கலந்து சிறப்பித்து, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சமயதீக்கைக்கிரியையைச் செவ்வனே நடத்தி, சமயதீக்கையை அருள்பெருகுமாறு வழங்கியது திருவருட்சம்மத விளைவேயாகும். 
ஏழாம் திகதி மாலை (07-09-2024) ''சைவசமயமே இன்பநெறி'' என்னும் தலைப்பில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மாணவரிடத்தும் பெற்றோரிடத்தும் சொற்பொழிவாற்றினார். சமயதீக்கையை அனைவரும் எத்தடையும் இல்லாது பெற்றுக்கொள்ளலாம் எனபதனைப் பல்வேறு சிவாகமக் குறிப்புக்களால் விளக்கினார்.
08ஆம் திகதி காலை அருள்மிகு மனோன்மணி அம்மன் திருக்கோயிலில் சமயதீக்கை கிரியைகள் செவ்வனே இடம்பெற்றன. மூன்று சைவசமய அறநெறிப் பாடசாலைகளில் இருந்தும் 65 பேர் சமயதீக்கை பெற்றுக்கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் நாவலர்பெருமான் எழுதியருளிய நித்திய கரும விதி நூலும், இலங்கை சைவநெறிக் கழக வெளியீடாகிய ''இல்லங்களில் சிவபூசை செய்வோம்'' நூலும், சிவலிங்கமும் பஞ்சபாத்திரம் சிறுதட்டம் உத்தரணியும் வழங்கப்பட்டதோடு, மாணவர்களின் வயதுக்கு ஏற்பத் தென்னாடு பத்திரிக்கைகளும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பல்வேறு நூல்களும் வழங்கப்பட்டது. மேலும், கலந்துகொண்ட அனைவருக்கும் இலங்கை சைவநெறிக் கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட திரு.வின்.மகாலிங்கம் அவர்களால் தொகுக்கப்பட்ட திருக்குறள் தொகுப்பு நூலும் வழங்கப்பட்டது. மதிய அன்னதானம் மாகேசுவரபூசையாக சைவாசார முறையில் நிகழ்த்தப்பட்டது. மாகேசுவர பூசையைத் தொடர்ந்து, சைவசமய அநுட்டானப்பயிற்சி வழங்கப்பட்டதோடு, இலகுவாக இல்லத்தில் செய்யக்கூடிய அன்புமார்க்க ஆன்மார்த்த சிவபூசைப் பயிற்சியும் வழங்கப்பட்டது. பொறுப்பாசிரியர் கலந்துகொள்வதே கட்டாயமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும், பெற்றோரும் மாணவரும் மாலை 5.30 மணிவரை நின்று, சைவசமய அறநெறி ஆசிரியர்களுடன் இணைந்து நின்று சைவசமய அநுட்டானப் பயிற்சியையும் அன்புமார்க்க ஆன்மார்த்த சிவபூசையையும் விருப்புடன் கற்றுக்கொண்டனர்.
கலந்துகொண்ட மூன்று அறநெறிப் பாடசாலைகளையும் சேர்ந்த மூன்று சைவசமய அறநெறி ஆசிரியர்களுக்கும் இணையவழியில் தொடர்ச்சியான சைவசமய வழிகாட்டற் பயிற்சிகளை இலங்கை சைவநெறிக் கழகம் வழங்கக்கூடியவகையில், சித்தாந்தரத்தினம்,சைவப்புலவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்த முதுகலைமாணி திருமதி உதயகௌரியார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மதமாற்றங்களைத் தடுக்ககூடிய வினைத்திறனான சைவசமயப்பணி இதுவென்று நெடுத்தீவுச் சான்றோர் பெருமக்கள் போற்றும் வகையில், இலங்கை சைவநெறிக் கழகம் இப்பெரும் சிவப்பணியை உயர்ந்தோரின் உதவியோடு செவ்வனே நிறைவேற்றக்கூடியதாகத் திருவருள் துணையாயிற்று. இதற்காகத் தம்மை அர்ப்பணித்தோர் அனைவருக்கும் இலங்கை சைவநெறிக் கழகம் நன்றி பாராட்டிக்கொள்வதனைக் கடனாகக் கொள்கின்றது. ‘’சைவசமயம் அனைவருக்கும் உரித்தானது’’ என்னும் உயர்ந்த கொள்கையில் உறுதியாக நிற்கும் நல்லோர் யாவரும் மனம் குளிரும்வகையில் இச்சிவப்பணியை இலங்கை சைவநெறிக் கழகம் நெடுந்தீவில் நடத்தியது திருவருட்சம்மத விளைவினாலேயாகும்.


















.jpg)



























Comments
Post a Comment