சைவ நன்னெறி பேணுதும் அருள்விழா -2024
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையின் அனுசரணையுடன் இலங்கை சைவநெறிக் கழகத்தின் பங்களிப்புடன் ‘சைவநன்னெறி பேணுதும்’ அரங்கு கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் 02- 01 - 2024 ஆம் நாள், கூனம்பட்டி ஸ்ரீகல்யாணபுரி ஆதீனத்தின் 57ஆவது குருமகாசந்நிதானம் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ இராஜ. சரவண மாணிக்கவாசக சிவாசாரிய சுவாமிகள் எழுந்தருளோடு இனிதே நடைபெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்க
மண்டபத்திற்கு எழுந்தருளிய கூனப்பட்டி சைவாதீன குருமகாசந்நிதானம் பெருமானார் ஜகத்குரு
ஸ்ரீலஸ்ரீ இராஜ. சரவண மாணிக்கவாசக சிவாசாரிய சுவாமிகளுக்கு சிவஸ்ரீ. கு. வை. க. வைத்தீசுவரக்
குருக்கள் அவர்களால் விழா ஏற்பாட்டாளர் சார்பில் பூரணகும்ப வரவேற்பு வழங்கப்பட்டது.
ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ இராஜ. சரவண மாணிக்கவாசக சிவாசாரிய சுவாமிகள் மங்கல விளங்கு ஏற்றி
அருள் விழாவை தொடங்கிவைத்தார். சைவச்சான்றோர் பலரும் சுவாமிகளைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றினர். ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ இராஜ. சரவண மாணிக்கவாசக சிவாசாரிய சுவாமிகள் சைவசமய நன்னெறி ஈழவள நாட்டில் தழைத்தோங்க வேண்டும்
என்னும் சைவ அன்பர்களின் உள்ளத்து வேண்டுதல் உணர்ந்து, ஈழவள நாட்டில் சைவசமயம் ஓங்கவேண்டும் என்று திருவருளை
விண்ணப்பித்து விடைக்கொடி ஏற்றி வைத்தார்கள். விடைக்கொடி ஏற்றும்போது, இலங்கை சைவநெறிக் கழக சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர் கொடிக்கவி பாடியதுடன், நிகழ்ச்சி நன்றே தொடங்குமாறு திருமுறை ஓதினர்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, உலக சைவப் பேரவை -இலங்கைக் கிளை என்பவற்றின் தலைவராக விளங்கும்
விடைக்கொடிச்செல்வர், சைவநெறிக் காவலர் சைவத்திரு.சி.தனபாலா பெருமகனார் மிகவும் சிறப்பான
தலைமையுரை நிகழ்த்தினார். கூனம்பட்டி சைவாதீனம் குறித்த அருள் வரலாறுகளைச் சபையோருக்கு
சிவத்திரு.ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபனார் விளக்கி உரையாற்றினார். இலங்கையில் உள்ள சைவசமயத்தார் சைவசமய ஆதீனங்களையே போற்றுதல் வேண்டும் என்றும், சைவசமயத்தை நிராகரிக்கும் ஏகான்மவாத
சுமார்த்த சங்கராசாரிய மடங்களுக்குள் வீழ்ந்து நிற்கும் இடர்நிலை ஒழிந்து, கந்தபுராணக்
கலாசாரம் என்று போற்றப்படுமாறு சைவசமயக் கற்புநெறி பிறழாது சைவாதீனங்களையே கொண்டாடும்
பண்பாடு மீளத் தாபிக்கப்படவேண்டும் என்றும், அதனாலேயே சுவாமிகள் இலங்கைக்கு எழுந்தருளும்
செய்தி அறிந்து இவ்விழாவை சைவ நன்னெறி பேணுதும் என்னும் தலைப்பில் சுவாமிகளை இலங்கைத்
திருநாட்டிற்கு வரவேற்கும் அருள்விழாவாகக் கொண்டாடத் திருவருளைச் சிந்தித்து இவ்விழா
ஏற்பாட்டை சைவ அமைப்புக்கள் சார்பில் ஏற்பாடு செய்ததாகவும் விளக்கி, சிறப்புரை நிகழ்த்தினார்.
சான்றோர்களின் உரைகளைத் தொடர்ந்து, சுவாமிகள் திருக்கண் ஏற்றருளுமாறு,
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை பீடத்தின் மாணவன் சிவத்திரு.வாமதேவ சிவசதீபன் அவர்களுடைய
திருமுறைப் பண்ணிசை மிகச்சிறப்பாக
நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு விழா ஏற்பாட்டாளர் ஒன்றுகூடித் திருவடிப்பூசை
நிகழ்த்தினர்.
கொழும்பில் உள்ள சைவ அமைப்புக்கள் யாவும் அணிதிரண்டு சுவாமிகளுக்கு மலர் மாலை பொன்னாடை
அணிவித்து சிறப்புச் செய்தனர். ஏறத்தாழ 150 பேருக்கும் மேலான சபையில், சுவாமிகள் ''சைவ நன்னெறி'' என்னும் தலைப்பில் இலங்கைச் சைவப்பெருமக்கள், மாணவர் முன்னிலையில் அருஞ்சிறப்பு வாய்ந்த உரையாற்றியருளினார். சுவாமிகள் தமது அருளுரையூடாக,
அடியார்களின் சிறப்புக்களை எடுத்துக்கூறி சைவ நன்னெறி பேணுதல் சைவசமயத்தாராகப் பிறந்தோர்
கடன் என்று சுவாமிகள் சைவசமயத்தாருக்கு உணர்த்தியருளினார். நிகழ்ச்சியின் இறுதியாக, இலங்கை சைவநெறிக் கழக சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறி
மாணவர் திருமுறை ஓதினர். குருமகாசந்நிதானம் பெருமானார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த சைவ
அமைப்புக்களின் சான்றோர் பெருமக்களுக்கும் சைவசமய அடியார் பெருமக்களுக்கும் திருநீறு
வழங்கி வாழ்த்தினார்கள். வீரகேசரிப் பத்திரிக்கையில்
01 - 01 - 2024ஆம் திகதியும், தினகரன், தமிழன் பத்திரிக்கைகளில் 02 -01- 2024ஆம் திகதியும்
சைவ நன்னெறி பேணுதும் விழா குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன.




































































Comments
Post a Comment