தென்னிலங்கை தெனியாயவில் சைவ மாநாடு
மாத்தறை மாவட்டத்தில் தெனியாயப் பகுதியில் 27- 10 - 2018ஆம் நாள் சைவ முன்னேற்ற மாநாடு வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் இலங்கை சைவநெறிக் கழகத்தாரும் கலந்து சிறப்பித்தனர்.
தெனியாய சைவ முன்னேற்றக் கழகமானது இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களின் வழிகாட்டுதலில் தெனியாயவில் தொடங்கப்பட்டுள்ள சைவசமய அமைப்பாகும். தெனியாயப் பிரதேசமானது கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைந்துள்ள முதன்மை நகரமாகும். கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவில் 10639 தமிழர் சனத்தொகை காணப்படுகின்றது. இதில், சைவசமய மக்களின் எண்ணிக்கை 8825 ஆகும். ஏனையோர் கிருத்தவராவர். இப்பகுதியில் கிருத்தவ இசுலாமிய மதமாற்றங்கள் பெரிதும் உள்ளதும், திருமண உறவுகள் கிருத்தவ இசுலாமிய மதமாற்றங்களுக்குப் பெரும் காரணியாக இருப்பதும் சைவசமய ஆர்வலர்களால் இனங்காணப்பட்டுள்ளது. கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பல்லேகம பிரதேச வைத்தியசாலையில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் பணியாற்றிய காலத்தில், இப்பகுதியிலுள்ள சைவ ஆர்வலர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால், தெனியாய சைவ முன்னேற்றக் கழகம் இப்பகுதி இளைஞர், மூத்தோரைக் கொண்டு அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட சங்கமானது,இலங்கை சைவநெறிக் கழக வழிகாட்டலில் சைவசமய மாநாடு ஒன்றை நடத்தத் திடசங்கற்பம் கொண்டு, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 27- 10 - 2018ஆம் நாள் வெகுசிறப்பாக நடத்தத் திருவருள் கூடியது.

Comments
Post a Comment